Minggu, 26 September 2010

எனக்கு நானே போட்டி : ஸ்ரீகாந்த் தேவா


‘டபுள்ஸ்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் தேவா, பத்து வருடங்களில் 50 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது 50வது படம், ‘ஆயிரம் விளக்கு’. தெலுங்கு ‘வெங்கடாத்ரி’ படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளருக்கான நந்தி விருது வாங்கியுள்ளார். நடிக்க ஏராளமான அழைப்புகள் வந்தாலும், ‘இசைதான் எனது அடையாளம்’ என்கிறார்.

நடிக்க ஏன் தயக்கம்?

இசையை தவிர எதுவும் தெரியாது. ஜெயம் ரவியை வைத்து இயக்கும் புதுப்படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க டைரக்டர் பிரபுதேவா அழைத்தார். மறுத்து விட்டேன். ஒரு பாடலுக்கு இசையமைப்பாளராகவே தோன்றி பாடுவது, ஆடுவது என்றால் சம்மதம். இப்போது அதையும் எதிர்பார்ப்பது இல்லை. இசையில் சாதித்த இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எனது தந்தை தேவா போன்றவர்கள், இசைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அவர்களை பின்பற்றி, இசைத்துறையில் மட்டுமே கவனம் செலுத்துவேன்.

யார் உங்களுக்கு போட்டி?

போட்டியாக யாரையும் நினைப்பது இல்லை. எனது முந்தைய படங்களின் இசையை, நானே அடுத்தடுத்த படங்களில் மெருகூட்ட ஆசைப்படுகிறேன். எனக்கு நான்தான் போட்டி.

ரீமிக்ஸ் பாடலை குறைத்து விட்டீர்களே?

‘காதல் வைபோகமே’ உட்பட நிறைய ரீமிக்ஸ் பாடல்களுக்கு இசையமைத்தேன். சில பாடல்களை பாராட்டினர். சில பாடல்கள், கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இனிமையாக இல்லை என்று, ஒவ்வொரு ரீமிக்ஸ் பாடலையும், அதற்கு முந்தைய பாடலுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. ‘கெடுத்துட்டாங்க’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறார்கள். அதற்காக பட்ட கஷ்டம், உழைப்பு வீணாகிறது. பழைய இசையமைப்பாளர்களின் ஆசீர்வாதம் இருந்தால்தான், எங்களை போன்றவர்கள் இசைத்துறையில் சாதிக்க முடியும். எனவே, ரீமிக்ஸ் பாடலை குறைத்து விட்டேன்.

ரீ-ரெக்கார்டிங்தானே முக்கியம்?

‘ஈ’, ‘சில நேரங்களில்’, ‘நேபாளி’ போன்ற படங்களில் எனது பின்னணி இசைக்கு பாராட்டு கிடைத்தது. கதையின் சூழலுக்கு ஏற்பத்தான் ரீ-ரெக்கார்டிங் செய்ய முடியும். பாடல் கம்போசிங், கோரஸ், பேக்கிரவுண்ட் மியூஸிக் போன்றவற்றில் இளையராஜாதான் எனது குரு. இப்போது இசையமைக்கும் ‘மறுபடியும் ஒரு காதல்’, ‘முரட்டுக்காளை’, ‘ஆயிரம் விளக்கு’, ‘அவர்களும் இவர்களும்’, ‘அர்ஜுனன் காதலி’, ‘கருங்காலி’, ‘பூலோகம்’ போன்ற படங்களின் பாடல்களிலும், பின்னணி இசையிலும் புதிய ஸ்ரீகாந்த் தேவாவை பார்க்கலாம்.

Tidak ada komentar:

Posting Komentar