
ஆக்ஷன் கிங் என்று பட்டப் பெயர் சூட்டப்பட்டுள்ள அர்ஜூன் நடித்து முடித்துள்ள இரண்டு பெரிய
படங்கள் வாங்குவாரின்றி தூங்குகின்றன, பெட்டியில்.
எந்திரன் என்ற ஒரேயொரு ப்ளாக்பஸ்டர்தான் இந்த ஆண்டு வெளியாகியிருக்கிறது. மற்றபடி தமிழ் சினிமாவின் வர்த்தகம் மிகவும் டல்லடித்துக் கிடக்கிறது. எந்தப் படம் வெளியானாலும் பார்க்க கூட்டம் வருவதில்லை.
எந்திரன் வெளியான இரு வாரங்கள் கழித்து, கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 6 படங்கள் வெளியாகின. இந்த 6 படங்களில் ஒன்றின் காட்சி கூட போதிய பார்வையாளர்களுடன் நடக்கவில்லை. சில திரையரங்குகள் காட்சியை நிறுத்திய சோகமும் நடந்தது.
இந்த நிலையில் வரவிருக்கும் படங்களுக்காவது நல்ல பிஸினஸ் இருக்கிறதா என்று விசாரித்ததில் கிடைத்த தகவல் அதிர்ச்சியடைய வைத்தது.
ஆக்ஷன் கிங் என்று வர்ணிக்கப்படும் அர்ஜூன் நடித்து சமீபத்தில் வெளியான எந்தப் படமும் ஓடவில்லை. கடைசியாக வந்த வந்தே மாதரம் பெரும் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் அவர் நடித்த வல்லக்கோட்டை, மாசி ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன.
ஆனால் இந்தப் படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வராததால், வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி ஏற, விழி பிதுங்கி நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
Tidak ada komentar:
Posting Komentar